Published Date: November 20, 2024
CATEGORY: CONSTITUENCY
அதிமுக ஆட்சியில் தவறான திட்டமிடல்.
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தெற்கு சித்திரை வீதியில் தனது ஆய்வை தொடங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திறக்கப்பட்ட பொது கழிப்பறையின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மேல கோபுர வீதியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்து அதனை துரித படுத்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேல கோபுர வாசலில் கழிவுநீர், சாலையில் செல்லாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தினார். கீழ சித்திரை வீதி மீனாட்சி பூங்காவில் முழுமையான ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பூங்காவை முறையாக பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தவறாக செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் தொலைநோக்குப் பார்வை இன்றி கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை தற்போது முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 வருடங்களில் திருத்திக் கொண்டு வருகிறோம்.
மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் குடிநீர், கழிப்பறை, பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்த திட்டப்பணியை செயல்படுத்தி உள்ளோம். சித்திரை வீதிக்கென தனிக் கவனம் செலுத்தி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அதனை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி நலனின் தனி கவனம் செலுத்தி வருவதோடு கண்புரை சிகிச்சைக்காக தொடர்ந்து நிபுணர்கள் குழு மூலம் யானை கண்காணிப்பில் உள்ளதோடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வனத்துறையினருடன் ஆலோசித்து கூடுதல் வசதிகள் யானைக்கு செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மேயர் இந்திராணி, ஆணையாளர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பாண்டி செல்வி, மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், பொன்னையா நகர் நல அலுவலர் இந்திரா, மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Media: Malaimalar